Sunday, July 14, 2013

நினைவுகளின் டிஸம்பர் பனி

காலை 11 மணி 5 நிமிடம். சத்யம் தியேட்டர் வளாகம். வேலை நாள்தான். சூது கவ்வும் படத்தில் வரும்  அலாரம் வைத்து சரக்கடிக்கிற கேரக்டர் மாதிரி,  அலாரம் வைத்து பர்ஸ்ட் ஷோ படம் பார்க்கிற எங்களைப் போன்ற கலா ரசிகர்களுக்காக 'தங்க மீன்கள்' படம் ரிலீசாகியிருக்கிறது. எங்களுக்காக  டிக்கட்டுகள் எடுத்த நண்பர் ஆழ்வார்ப்பேட்டை மார்க்கமாக தினசரி ரோந்து போயிருப்பதால் நாங்கள் வாசலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நண்பன்  ப்ரித்வி அந்த துரோகியை போனில்   அழைத்துக்கொண்டிருக்கிறான். நானும் கோபியும் கற்றது தமிழ் படம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறோம். நேரம் சரியென்றால்  படம் இந்நேரம் துவங்கியிருக்க வேண்டும். "சல்லடா.. இந்நேரம் படம் போட்ருப்பாங்க.. மண்ட காயுது" என்ற டயலாக்கை கோபி டெலிவரி செய்த நேரத்தில் எனக்கும் ஏறுகால் வெயிலில் மண்டை பிளந்தாலும் கண்களுக்கு மட்டும் குளிரடிக்கிறது. "அவன் வர்ற மாரி தெரில.. வேற எதாச்சுக்கு டிக்கட் பார்க்கலாமா?" என்று கட் கொடுத்த ப்ரித்விக்கு கோபி கொடுத்த லுக்கில் ஃபேட் அவுட்டாகி அடுத்த காட்சிக்கு  விரிகிறது ப்ரேம்.

ஒரு கண்ணாடிக்கூண்டு. அதனுள்  கதறக்கதற மண்டியிட்ட ஒருவனுக்கு கபாலத்தில் ஸ்கெட்ச் போட்டுவைத்து, வெளியே வெண்ணிற சோபாவில் சாய்ந்தபடி, ஏதோ  ஒரு வஸ்துவை  புகைத்துக்கொண்டிருக்கிற என் சிக்னலுக்கு காத்திருக்கிறான் ஒருவன். அருகிருக்கிற கண்ணாடி டேபிளில் சிகப்பு நிறக்கோப்பையில் காபியிலிருந்து ஆவி பறக்கிறது. அதனருகில் ஒரு ஐ-போன். கிட்டத்தட்ட பில்லா செட் மாதிரி. மீதாவும் தாராவும் மட்டும் மிஸ்ஸிங். ரசித்துப் புகைத்துப்  பின் ருசித்த  காபி தீர்ந்த போது உண்மையில் பரம திருப்தியும், கண்ணாடிக் கூண்டெல்லாம் இரத்தமும்.

அடுத்த நொடி சென்னை ஏர்ப்போர்ட்டின்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுன்டரில் இருக்கிறேன். கிளிப்பச்சை கலர் சுடிதாரில், ப்ரியா ஆனந்த் சாயலில் ஒரு பெண் எனக்கு முன் வரிசையில். அம்மா சொல்வது மாதிரி "புள்ளைன்னா புள்ள.. கிளி மாதிரி" ரகம். அவள் தெலுங்குப் பெண்ணாக இருக்கக் கூடும். இல்லை, அவள் தெலுங்குப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்த நேரத்தில் வேறெங்கு செல்லும் விமானப் புறப்பாடும் இல்லையென்பதால், அவள் என்னுடனே பயணிக்கப் போகிறாள் என்பதை சிக்கலின்றி  உறுதிசெய்துவிட்ட என் மனநிலையை விவரிக்க ஒரு சினிமா உதாரணம் தேவைப்படுகிறது. அம்பாள் நகர் ஆந்திரா மெஸ்ஸில் சாதத்தில் மஜுக்கு புளுசைக் குழப்பி அடிக்கையில் சம்பந்தமின்றி நினைவுக்கு வந்து புரை ஏறச்செய்யும் இக்காட்சி 'தவமாய் தவமிருந்து'  படத்தில் வரும் "நானே தொலைந்த கதை" பாடலில் வருகிறது. பத்துப் பதினைந்து பந்துகள் பரப்பி வைக்கப்பட்ட பேஸ்கட்பால் கோர்ட்டின் நடுவே கதையின் நாயகனான சேரன்சார், சிகப்பு கலர் புல்ஃஎண்ட் ஜெர்கின் மாட்டிக்கொண்டு ஜாக்கிங் ஸ்டைலில் ஒரு குட்டி வட்டமடித்து, பின் இரண்டடிக்குத் துள்ளிக்குதித்து, ஃப்ரீஸாகி... கதைப்படி பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதான, முதற்காதல் நிகழும் நாயகனின் மன ஓட்டத்தை பிரதிபலித்திருப்பார். எனக்கு இருபத்தெட்டு ஆவதால் மனசை மட்டும் சேரன்சார் பாணியில் துள்ளிக்குதிக்கச் சொல்லிவிட்டு, இயல்பாகவே நோட்டம் விடுகிறேன்.

அவள் என்னை கவனிப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை கவனித்தாலும் எனக்கு அது "ஜஸ்ட் லுக்கிங்" என்கிற தெளிவிருப்பதால் கவனிப்புகள் பற்றிய சிந்தனை தவிர்த்து சான் பிரான்சிஸ்கோ வரை செக்-இன் செய்யப்படுகிற அவள்  பெட்டிகளில் ஐந்தாறு பாட்டிலுக்கு சிக்கன் பிக்கிலும், கோங்குரா பிக்கிலும் இருக்கலாம் என அவதானிக்கிறேன். செக்-இன் முடித்தவள், செல்போனில் "அம்மா செக்-இன் ஐப்போயிந்தி .. எக்ஸ்ட்ரா லக்கேஜ் பட்டி(ன்)ச்க்கோ லேது .." என்றவாறே என்னைக்  கடந்து செல்கிறாள். சுந்தரத் தெலுங்கு என்பதுதான் எவ்வளவு துல்லியமான வர்ணனை. கொஞ்ச நேரம் மகாகவியை நினைத்து விட்டு, செக்-இன், செக்யூரிட்டி செக் முடித்து சூடான காபி தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கிளியைத் தேடியும்தான். கிலியடிக்கிற காபி விலைக்கு கிளி கண்படும் தொலைவில்தானிருக்கிறது என்பது ஆறுதலாகிறது. கதறிக்கொண்டிருந்த யுவனின் பின்ணணி ம்யூட் செய்யப்பட்டு  'ஐ கேவ் மை ஹார்ட் அண்ட் சோல் டு யு கேர்ள்...' என செவிக்குள் தெறிக்கிறது பாடலும், இசையும்.

லொகேஷன் தேடல். ஒரு திரைப்படத்துக்காகவென வைத்துக்கொள்ளலாம். ஒரு கிணறு வேண்டும். கிணற்றைச் சுற்றி சப்பாத்திக்கள்ளி வேண்டும். கிணற்றருகேயே ஒரு  குழியில் மோட்டார் வேண்டும்.  ஞாபகத்துக்கு வந்தது ஊர்க் குடிகிணருதான். அப்பத்தா, அமுச்சி, அவர்கள் பாட்டன் பூட்டன் தொட்டு நீரிறைத்த குடிகிணறு இப்போதும் பஞ்சாயத்து பைப்பில் உப்புத்தண்ணீராய் வழிந்துகொண்டிருக்கிறது. நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்  லொகேஷன் வந்தாகிவிட்டது. முன்பு மாதிரி இல்லை குடிகிணறு. கிணற்றிலிருந்து  பத்துப்பதினைந்து அடி தள்ளி சுற்றிலும் மதில் எழுப்பி கேட் போட்டிருக்கிறார்கள். ஆனால் கேட் திறந்தே கிடந்ததால் உள்நுழைகிறோம். ஆம், நுழைகிறேன் அல்ல.. நுழைகிறோம். உடன்வர அடம்பிடித்து என் கைகளைப் பற்றிக்கொண்டு நடக்கும் இப்பேரழகியை.. காதலி எனலாம்.. சமகாலத்திற்கு ஏற்றபடி கேர்ள் ப்ரெண்ட் எனவும் சொல்லலாம். கிட்டத்தட்ட கௌதம்சார்  படங்களில் வருவது போல்  "கைய பிடிச்சிக்கிட்டு நடந்தா.. கவிதையா இருந்துச்சு.." என வாய்ஸ்ஓவர் கொடுக்கப்பட வேண்டிய இந்த சிச்சுவேஷனில்  "இப்போவே சொல்லிப்போடுங்கண்ணி.. நம்ம சனத்துல இத்தன புள்ளைக இருக்கப்போ எவளோ ஆட்டக்காரியவெல்லாம் கட்டிவெய்க்க முடியாது..." என்று அத்தைகள் குழுமம் அம்மாவிடம் தீர்மானம் நிறைவேற்றப்போவது வேறு இன்டர்கட்டாகித் தொலைக்கிறது.

இருவரும் கேட்டிலிருந்து பத்தடி கடந்தபின், பத்துப் பதினைந்து படிகள் இறங்கி நிற்கிறோம். தண்ணீரில் விழும் எங்களின் பிம்பம் ஏதோ ஒரு புல்லரிப்பைக் கொடுக்கிறது எனக்கு. விடலைப் பருவத்தில் மனசு சிருஷ்டித்த காதலி கதாப்பாத்திரத்திற்கு கலர் கொடுத்துப் போனவர்கள் எத்தனையோ.. இவள் உயிர் கொடுத்து உடனிருக்கிறவள் இல்லையா? என்ன நினைத்தாளோ, அவளின் விரலில் இருந்து செப்பு மோதிரமொன்றைச் சுழற்றி கிணற்றில் எறிகிறாள். அது மெல்லிய சத்தத்தோடு நீர்ப்பரப்பில் பட்டுத் தெறித்து  உருவாக்கிய டாப்ளர் எபெக்டில், வாய்க்கால் மேட்டு பஸ் ஸ்டாப்பில் வீசப்பட்ட முதல் காதல் அம்புக்கு பதிலடியாய், "சார்.. இந்த ரெண்டு பாய்சும் மாத்தி மாத்தி டிப்பி அடிக்கிறாங்க.."  என்று மாட்டிவிட்டு, கண்களில் கனல் கக்கிய வெளிர்நீலத்தாவணியில் இருந்து... கடைசியாக கலாப்ரியா கவிதைகள் தந்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னவள் வரை வந்து வந்து, எனக்கொரு மெல்லிய புன்னகை தந்துவிட்டு இவளுடன் அறிமுகமாகிக் கொள்வது மாதிரி ஒரு கலவரக் கற்பனையில் இருந்த என்னை இயல்பிற்குத் திருப்பியது அன்றைக்கான முதல் முத்தம்.. இரண்டாவது முடிவதற்குள் பதறி எழுகிறேன்.

அதிகாலை 8.53 என்கிறது ஐ-போன்.. அம்மாவிடமிருந்து மூன்று மிஸ்டு கால்கள்.. பேஸ்புக்கின் அழகுப் பெண்ணிடமிருந்து ஒரு மென்ஷன்.. சிலபல ஈமெயில்கள்.. என வெகு சாதரணமாகவே விடிந்திருக்கிறது. "டிசைன் டிஸைனா கனவு வருது.. #சப்-கன்பூசியஸ்" என்றொரு ட்வீட் தட்டிவிட்டு, ஒரு வழியாகக் கிளம்பி  ஆபீஸ் வந்தாகியும் விட்டது. காபி மெஷின் ரீங்காரம் ஓய்ந்து காபிக்கு சர்க்கரை கலந்து கொண்டிருக்கையில் தொடங்கி, காபி முடியும் வரை திரும்பத் திரும்ப ரீ-வைண்ட் ஆகிறது கனவுத்தொடர். அதுவும் கடைசிப் படலம் முடிவதாகவே  இல்லை. ஒவ்வொரு கனவும் ஒரு கதை  சொல்கிறது எனக்கு - நண்பர்களுடான நிமிடங்களை.. ஒரு துரோகத்திற்கான பதிலடியை.. ஒரு பெண்ணின் மீதான இயல்பான ஈர்ப்பை.. நம்பிக்கையின் ஊற்றாய் ஒரு காதலை..! ஒவ்வொரு கதைக்கும் புன்னகைத்து வைக்கிறேன். ஒவ்வொன்றிக்குமான புன்னகையும் ஒவ்வொரு மாதிரி எனினும், இப்படி திரும்ப நினைக்கையில் புன்னகைக்கிற கனவுகளாகவே வாழ்க்கை இருந்து விட்டால் எப்படி இருக்கும்? என்று எனக்கு நானே பிலாசபி பேசி,  காபி முடித்து,  கொஞ்சம் பேஸ்புக் மேய்கையில்  எதேச்சையாய்த் தென்படுகின்றன வண்ணதாசனின் வரிகள்... என் நிலையுணர்த்தி!

"நினைவுகளின் டிஸம்பர் பனி 
சொப்பனங்களின் போர்வையால் 
மூடமுடியவில்லை 
நடுங்கும் காயங்களை"

Thursday, February 14, 2013

காதலர் தினம்

ஒவ்வொரு காதலர் தினத்திலும் இது ஏதோவொரு பாண்டஸிக்கு யாரோவொருத்தர் ஆரம்பித்த டகால்டி வேலை என்று நினைத்துக் கொள்வதோடு "வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி" என்று காதலை அறிவியலாக்கி முடித்து விடுகிற ஜீனியஸ்த்தன சினிமா வசனம் பேசி வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்திருந்த போதும், காதல் என்கிற அதரப்பழசான வார்த்தை உள்ளூரக் கொடுக்கிற "பெப்" சொல்லித் தீராதது.

உண்மையில் என்னுடையது காதல் சூழ் உலகு. எனக்கு உலகம் அறிமுகமானதே காதலால்தான். நான் அறிந்த முதல் காதல் கதை அப்பா-அம்மாவுடையது. மழை நேரத்து மாலைகளில் மரவள்ளிக்கிழங்கு, வரக்காபி சகிதம் இருவரும் அவர்களின் காதல் கதையை சொல்லிக்கொண்டிப்பார்கள். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். நேற்றுக்கூட அப்பாவின் ஒரு கடிதத்திற்கு பதிலாக அம்மா எழுதிய கவிதையொன்று எதையோ தேடிக்கொண்டிருந்த போது கிடைத்தது. பழுப்பாகி விட்ட முப்பது வயசைக் கடந்த  காவியம் அது. "எங்க அக்காவ இவங்க அண்ணனுக்கு கட்டினது.. இவரு சண்டித்தனத்துக்கு என்னைய குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. பாத்தாரு.. ஒருநா வெள்ளிக்கெழம சாயங்காலம் தே.. வா போலாம்னாரு.. கட்டுன தாவணியோட வந்ததுதேன்" என்று ஸ்கூல் விட்டு வந்த பேரனுக்கு ஹார்லிக்ஸ் கலக்கிக்கொண்டே எங்கள் பழைய வீட்டுக்காரம்மா சொன்ன போது வீட்டுக்காரய்யா முகத்தில் வாழ்நாள் சாதனை புன்னகை. அது நாற்பது வருடம் கடந்து தொடரும்  காதலின் பெருமிதம்.

இப்படி முப்பது நாற்பது வருடங்களை கடந்த காதல் ஜோடிகள் முதல், பல சாதீய-சமூக தடைகள் தாண்டி இணைந்த தம்பதிகள், "அடக்கடவுளே"வில் இருந்து "கர்த்தரே"வுக்கு மாறிவிட்ட நண்பன், "ஹே.. ஹாரிபிள் மேன்.. டு அண்ட் ப்ரோ, ஷி ட்ராவல்ஸ் அபௌட் 4 ஹவர்ஸ் எவ்ரிடே" என்று புது மனைவிக்காக நொந்துகொள்கிற பக்கத்து க்யூபிகல் வடக்கத்தி நண்பன், "நாளைக்கு எங்க கல்யாண நாள், சர்ப்ரைஸா ஒரு கேக் வாங்கி அவருக்கு வெட்டறீங்களா?" என்று கொங்கு தேசத்திலிருந்து அமெரிக்காவுக்குப் பேசும் குரல், அத்தனைப் பெண்களும் லேடீஸ் கோச்சில் ஏறிக்கொள்கிற அந்த ஸ்டேஷனில் காதலனுக்காக ஜெனரல் கோச்சில் மெனக்கெடும் சாப்ட்வேர் பெண் வரை.. காதல் சூழ் உலகு!

"இருபத்தேழாயும் வேண்டா வேண்டான்னு உம்பாட்டுக்கு அர்த்தங்கெட்டதனமா.. உங்கொப்பன் உன்ற வயசுல முந்நூறு குடும்பத்த எதித்திட்டு உங்கம்மால கட்டிக்கிட்டான்.. அப்டி கிப்டி எதாச்சி இருந்துச்சுனா உள்ளதச் சொல்லிப்போடு.." என்று கேட்டுக்கொண்டே வெற்றிலைக் குதப்பலோடு நகர்ந்து விட்ட அப்பாருக்கு எதை சொல்வது? எதை விடுவது? காதல் பிறந்த போதே காத்திருத்தலும், ஏக்கமும், தவிப்பும் இலவச இணைப்பாகத் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். போருக்கோ, பொருளீட்டவோ பிரிந்து போயிருக்கும் தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் வலியைப் பதிவு செய்ததில் ஆரம்பித்து, இன்று வள்ளுவர் கோட்டத்து ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜைக்கும் கூட சம்மந்தமேயில்லாமல் "ஒய் திஸ் கொல  வெறி டி" என்று காதலின் பிரிவு பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எழுத்தாளர் ராஜு முருகனின் "பிரிவைவிட வேறு சிறந்த காதல் பரிசு இருக்கிறதா என்ன?" என்ற வரிகளில் பிரிவின் வலியும், நீங்கா நினைவுகளும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.

உண்மையான காதல்கள் பிரிந்து போவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.. காரணம் என்னவாக இருப்பினும். சாதி மறுத்து மணம் செய்து கொண்டவர்களை பழிவாங்குகிறசாக்கில் ஊரையே தீக்கிரையாக்குற சாதிவெறியர்கள் ஒருபுறமிருக்க, காதலே இல்லாமல் காதலிப்பவர்கள் அச்சமூட்டுகிறார்கள். காதலை மறுக்கிற பெண்ணின் மேல் அமிலம் வீசிச் சிதைக்கிற, முகத்தில் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துகிற மூர்க்கமானவர்கள் காதலைப் பற்றி என்ன புரிதல் கொண்டிருப்பார்கள்? ஏதோவொரு ஈர்ப்பிற்கு காதலெனும் அர்த்தம் கற்பித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்? சாலையைக் கடக்கிற சப்வேயில் காதலுரையாற்றிக்கொண்டிருக்கும் பள்ளிச் சிறார்களைக் கடப்பது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.. பொள்ளாச்சியில்! இப்படி பக்குவற்ற காதல்களைத்தான் சாதிவெறியர்கள் ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள். உயிராய் நேசித்து வாழ்க்கையைத் துவங்க நினைப்பவர்களை, அவர்களின் கனவுகளைச் சிதைக்கிறார்கள். 

உண்மையில் நம் சமுதாயத்தின் இன்றைய தேவை.. காதலை உணர்கிற தெளிவும், எதிர்ப்புகளை கடந்து  போகிற புரிதல் மிக்க காதல்களும், பிரியம் வளர்த்துக்கொண்டேயிருக்கும் கலப்புத்  திருமணங்களுமே. காதல்கள் பெருகட்டும். மனிதம் தழைக்கட்டும்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்! 


Saturday, January 26, 2013

எப்பவோ ஹலோ  எப்.எம்-ல கேட்ட எஸ்.வி.சேகர் நாடகத்தில புடிச்ச வசனங்கள சேமிக்க ஆரம்பிச்சு பாதியில விட்டுட்டேன்.. சும்மா போஸ்ட் பண்ணலாம்னு :)

"ஏன்டா சீனு.. பொண்ணு எப்படி?"

"ரொம்ப சின்ஸியர் சார்.. அவ புருஷனுக்குக் கூட தெரியாது.."

"அடப்பாவி! மாற்றான் தோட்டத்து மல்லிகை டா.."

"மணக்குது சார்!" :D

...

"ஜே.பி. மாதிரி ஒரு ஆள் இருக்கவே முடியாது.. குருவி மாதிரி பணத்த சேர்த்தாரு"

"எப்டி மூக்காலய?"

...

"ஏன் சார்.. ஜே.பி-ய உங்களுக்கு எப்படி பழக்கம்.."

"நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்-ல.."

"படிச்சீங்களா?"

"இல்ல மழைக்காக ஒதுங்கனோம்"